Tamilசினிமாதிரை விமர்சனம்

’பூமி’ -திரைப்பட விமர்சனம்

தமிழகத்தின் சிறு கிராமம் ஒன்றில் பிறந்த ஜெயம் ரவி, நாசா விஞ்ஞானியாவதோடு, செவ்வாய் கிரகத்தை மனிதர்கள் வாழக்கூடிய இடமாக மாற்றும் திட்டம் ஒன்றை வகுக்கிறார். அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக அவருக்கு கிடைக்கும் ஒருமாத விடுமுறையில் தனது சொந்த கிராமத்திற்கு வருகிறார். வந்த இடத்தில் விவசாயிகளின் நிலை மற்றும் விவசாய நிலங்களின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைவதோடு, அதனை சரி செய்யும் முயற்சியில் இறங்குகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் பூமி படத்தின் கதை.

கடும் குளிரிலும் டெல்லியில் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், எதற்காக அத்தகைய போராட்டத்தை நடத்துகிறார்கள், என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால், பூமி திரைப்படத்தை ஒரு முறையாவாது பார்த்தாக வேண்டும்.

விவசாயம் மற்றும் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து பல திரைப்படங்கள் பேசியிருந்தாலும், விவசாயம் அழிந்து வருவதால், மக்கள் தங்களுக்கே தெரியாமல் எப்படி கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக்கப்படுகிறார்கள், என்பதை அழுத்தமாகவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் புரியும்படி எளிமையாகவும் இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

நாசா விஞ்ஞானியாகவும், இயற்கை விவசாயியாகவும் ஜெயம் ரவி நடிப்பில் அமர்க்களப்படுத்துகிறார். செவ்வாய் கிரகத்தில் கால் வைத்த முதல் மனிதன் என்ற சாதனையை விட, அழிவுப்பாதையில் செல்லும் என் நாட்டை காப்பாற்றுவதே முக்கியம், என்று சொல்லும் இடத்தில் அழுத்தமான நடிப்பை வெளிக்காட்டுபவர், விவசாயிகளுக்காக போராடும் இடத்திலும், அரசியல்வாதியிடம் விவசாயிகளுக்காக பேசும் இடத்திலும் கைதட்டல் பெறுகிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் நிதி அகர்வால் கவர்ச்சியான அழகியாக இருக்கிறார். ஆனால், ஒரு சில காட்சிகளில் ஜெயம் ரவியை காதலிப்பவர், பிறகு ஜெயம் ரவியுடன் பயணிக்கும் நண்பர்களில் ஒருவராக அவ்வபோது முகம் காட்டி மறைகிறார்.

அரசியல்வாதியாக நடித்திருக்கும் ராதாரவி, அரசு அதிகாரிகளாக நடித்திருக்கும் ஜான் விஜய், மாரிமுத்து ஆகியோர் தற்போதைய அரசு மற்றும் அரசு எந்திரங்களின் மோசமான நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். விவசாயியாக நடித்திருக்கும் தம்பி ராமையா, தற்போதைய விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலையை புரிய வைக்கிறார்.

டி.இமான் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருப்பதோடு, சிந்திக்கும்படியும் இருக்கிறது. டட்லியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். ஜான் ஆபிரகாம் மற்றும் ரூபனின் படத்தொகுப்பு படத்துடன் நம்மை ஒன்றிவிட செய்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களால் நாடு எப்படிப்பட்ட மோசமான நிலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறது, என்று பலர் பேசி கேட்டிருப்போம். ஆனால், அதை அவர்கள் எப்படி செய்கிறார்கள், என்பதை இயக்குநர் லக்‌ஷ்மண் விரிவாக சொல்லியிருக்கிறார். குறிப்பாக அம்பானி மற்றும் அதானி பற்றி தற்போது நாடே பேசினாலும், அவர்கள் யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள், என்பதை வில்லன் ரோகித் ராய் மூலம் மிக தெளிவாக இயக்குநர் விளக்கியிருக்கிறார்.

படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, தான் சொல்ல நினைத்ததில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர் லக்‌ஷ்மண், விவசாயம், தண்ணீர் பற்றாக்குறை அதனால் ஏற்படும் விளைவுகள், அதில் இருந்து நம்மை நாம் எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பது பற்றி அழுத்தமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.

அதிலும், ஜெயம் ரவியின் முயற்சிக்கு கார்ப்பரேட் நிறுவன முதலாளி போடும் முட்டுக்கட்டைகளாக, நாம் தற்காலத்தில் எதிர்கொள்ளும் சம்பவங்களை நேர்த்தியாக கோர்த்து சொல்லியிருப்பது மக்களுக்கான பாடமாக உள்ளது.

தனது 25 வது திரைப்படமாக இப்படி ஒரு படத்தை தேர்வு செய்த ஜெயம் ரவியையும், இப்படி ஒரு கதையை அனைவருக்கும் புரியும்படி அழுத்தமாக சொல்லிய இயக்குநர் லக்‌ஷமணையும் வெகுவாக பாராட்ட வேண்டும்.

ஆனால், இப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் சேரும் வகையில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி இல்லாமல், கார்ப்பரேட் நிறுவனமான ’டிஸ்னி ஹாட் ஸ்டாரில்’ என்ற ஒடிடி தளத்தில் வெளியாகியிருப்பது தான் பெரும் குறையாக இருக்கிறது.

-ரேட்டிங் 4.5/5