பொங்கல் பண்டிகை சிறப்பு பரிசு! – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 1000 ரூபாய் ரொக்கப் பணத்துடன், பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்காக ரூ.2,363 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் பொங்கல் பரிசுத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், காணொலி காட்சி வாயிலாக இத்திட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொங்கல் பரிசு 1000 ரூபாயுடன், பொங்கல் வைப்பதற்காக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சையுடன் கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் 2.05 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர்.
இதேபோல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி-சேலை திட்டத்தையும் முதலமைச்சர் இன்று துவக்கி வைத்து 16 குடும்பங்களுக்கு வழங்கினார். இத்திட்டத்தின்கிழ், 425.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.67 கோடி வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளன.