Tamilசெய்திகள்

மதுரை சித்திரை திருவிழா – கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி

மதுரையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா பக்தர்கள் பங்களிப்புடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மீனாட்சி சித்திரை திருவிழா முடித்து விட்ட நிலையில் கள்ளழகர் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மீனாட்சி சுந்தரேசுவரர், கள்ளழகரை தரிசிக்க மதுரை நகரை நோக்கி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு தரிசனம் செய்த அவர்கள் கடந்த சில நாட்களாக மதுரை நகரையே வலம் வந்தபடி இருந்தனர்.

இதனால் மதுரை நகரில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தோல்பையில் தண்ணீரை வைத்து கொண்டு நகர் முழுவதும் வலம் வந்தனர்.

இந்த நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மதுரையில் 2 நாட்களாக மழையும் பெய்ததால் வைகை ஆற்றில் தண்ணீர் அதிக அளவு சென்றது.

இதனை தொடர்ந்து பக்தர்கள் நலன் கருதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது யாரும் வைகை ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக தடுப்பணை பகுதியில் ஆழம் அதிகமாக இருப்பதால் அங்கு பக்தர்கள்
செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது. மேலும் பக்தர்கள் ஆற்றுக்குள் இறங்காமல் இருக்க தடுப்பு கட்டைகள் மூலம் வேலி அமைக்கப்பட்டு இருந்தது.

கள்ளழகர் வைகை ஆற்றில் இன்று இறங்கியபோது அதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் மதுரை நகரமே குலுங்கியது. கள்ளழகர் வைகை ஆற்றுக்கு வருவதற்கு முன்பே ஆற்றுப்பாலம், ஆற்றுக்குள் கள்ளழகர் இறங்கும் பகுதியான ஆழ்வார்புரம், கோரிப்பாளையம்
பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டமே காணப்பட்டது.

இதன் காரணமாக அந்த பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பெண்களும், குழந்தைகளும் வயதானவர்களும் கூட்டத்தில் சிக்கி தவிப்புக்குள்ளானார்கள். அவர்கள் அங்கிருந்து நகர்ந்தால்போதும் என்று நினைத்தாலும் அதற்கு வழி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பலரும் மூச்சுவிட திணறினர். சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. மேலும் பலர் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி சுமார் 60 வயது மூதாட்டி மற்றும் 40 வயது ஆண் பரிதாபமாக இறந்தனர். ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட நெரிசலில்தான் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது பற்றிய
விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூட்ட நெரிசலில் 2 பேர் பலியான சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பலியானவர்களின் உடல்களை பார்த்தனர். பின்னர் காயத்துடன் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல்
கூறினர்.

வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் இறங்கும் வைபவத்தை காண சென்ற மூதாட்டி உள்பட 2 பேர் நெரிசலில் சிக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.