Tamilசெய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதி – தனியார் பள்ளிக்கு விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்றிரவு சுமார் 11 மணி அளவில் சிறுத்தை நடமாடுவதை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுத்தையை தெரு நாய்கள் விரட்டி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும், அப்பகுதியின் சாலை ஓரத்தில் சிறுத்தையின் கால் தடம் பதிந்துள்ளதும் தெரியவந்தது. இதனை வைத்து அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று இறந்து கிடந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சிறுத்தையை யாராவது கண்டால் 93608 89724 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் மகாபாரதி, அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இந்த சிறுத்தை திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக வந்திருக்கலாம் என்றும், தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் தேடி வரும் போது வழி தவறி நகருக்குள் வந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். இதற்காக வனத்துறை, தீயணைப்புத்துறை, காவல் துறை ஆகியவை இணைந்து பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சிறுத்தை பிடிக்கப்பட்டு விடும் என்றனர்.

வனப்பகுதி எதுவும் அருகில் இல்லாத நிலையில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் மயிலாடுதுறை நகரின் மையமான கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை உலாவும் சம்பவம் அப்பகுதி மக்கள் மனதில் அச்சத்தையும், பெரும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.