வீட்டில் சினிமா பற்றி பேசுவதில்லை! – சமந்தா
நடிகை சமந்தா திருமணத்துக்கு பிறகும் தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“தொழிலுக்கும் வாழ்க்கைக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? எதற்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். சினிமாவில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் சரி குடும்ப வாழ்க்கைக்கு எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் நான் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பேன்.
நாம் சந்தோஷமாக இருக்கத்தான் உழைக்கிறோம் சம்பாதிக்கிறோம். வீட்டில் நுழைந்தால் ஒரு ஆனந்தமயமான சூழல் இருக்க வேண்டும். நானும், நாக சைதன்யாவும் ஒரே துறையில் இருக்கிறோம். கணவரின் மொத்த குடும்பமும் சினிமா துறையில் ஏதோ ஒரு வகையில் இணைந்து இருக்கிறார்கள்.
ஆனால் வீட்டில் சினிமா பற்றி பேசமாட்டோம். மாலை 6 மணி ஆகிவிட்டால் எல்லா சினிமா விஷயங்களையும் மறந்து என்னை பற்றி சைதன்யாவும், அவரைப்பற்றி நானும் யோசிப்போம். எங்கள் வாழ்க்கையை பற்றி மட்டுமே சிந்திப்போம். சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவோம்.
அதனால் எங்களுக்கு தேவையான நேரத்தை எங்களால் ஒதுக்கி கொள்ள முடிகிறது. சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்ள முடிகிறது. இருவரும் சேர்ந்து புதிய படமொன்றில் நடிக்கிறோம். ஆனாலும் வீட்டில் வந்து பட விஷயங்கள் பற்றி பேசுவது இல்லை. படப்பிடிப்பு அரங்கில் பேசுவதோடு சரி”. இவ்வாறு சமந்தா கூறினார்.