வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கியது.
எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னை மட்டுமின்றி தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளிலுமே கனமழை தொடர்ந்து நீடித்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை பெய்து வரும் வேளையில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை பொழிவு மிகவும் அதிகமாக உள்ளது.
இந்த மாதத்தில் இதுவரை 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி பெருமழையை கொடுத்துள்ளன.
சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே மழை பெய்ய தொடங்கியது. தீபாவளியையொட்டியும் கனமழை பெய்து வெள்ளம் தேங்கியது.
இந்த நிலையில் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மாநகரில் மிக கன மழை பெய்தது. 20 சென்டி மீட்டருக்கு அதிகமாக சென்னையில் பெய்த மழையால் மாநகரம் வெள்ளக்காடாக மாறியது.
இந்த நிலையில் கடந்த வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2-வதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அப்போது சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு பெரிய அளவில் மழை பொழிவு கொடுக்காமல் கருணை காட்டி விட்டு ஆந்திரா நோக்கி சென்றது.
இருப்பினும் அப்போது புதுவை மாநிலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அதிக மழை பெய்தது.
இந்த நிலையில் 3-வதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாகவும் அதுவும் சென்னைக்கு மிக கனமழை கொடுக்கும் எனவும் சென்னை வானிலை மையம் கடந்த வாரம் எச்சரித்து இருந்தது.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வானிலை மையம் அறிவிப்பில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பில்லை என தெரிவித்தது. ஆனால் காற்றழுத்தம் காரணமாக சென்னையில் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவித்து இருந்தது.
இதன்படி சென்னையில் நேற்று காலையில் இருந்தே மழை பெய்தது. பிற்பகலுக்கு பிறகு கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை இரவு முழுவதும் நீடித்தது. இடி-மின்னலுடன் 10 மணி நேரத்துக்கும் மேலாக தொடர் மழை பெய்து கொண்டே இருந்தது.
இன்று காலையிலும் மழை நீடித்தது. இதன் காரணமாக சென்னையில் வெள்ளம் வடிந்து இருந்த பகுதிகளில் மழை நீர் மீண்டும் தேங்கி உள்ளது.
விடிய விடிய பெய்த கனமழை காரணமாக சென்னை மாநகரம் மீண்டும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் 300 தெருக்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
தி.நகர், கே.கே.நகர், மாம்பலம், மேற்கு மாம்பலம், கோயம்பேடு, வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, புரசைவாக்கம், புளியந்தோப்பு, எழும்பூர், வேளச்சேரி, மேடவாக்கம், அண்ணாநகர், முகப்பேர், வேப்பேரி உள்ளிட்ட மாநகரின் அனைத்து இடங்களிலும், புறநகர் பகுதிகளிலும் வெளுத்து வாங்கிய மழையால் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் அதிகளவில் தேங்கி உள்ளது.
பூந்தமல்லி நெடுஞ்சாலை கமிஷனர் அலுவலகம் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் முக்கிய சாலைகளிலும், தெருக்களிலும் தண்ணீர் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கி உள்ளது.
புளியந்தோப்பு, ஓட்டேரி, மாதவரம் வடபெரும்பாக்கம், விளங்காடுபாக்கம் உள்ளிட்ட இடங்களிலும், வேளச்சேரி, மடிப்பாக்கம் போன்ற தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் அதிகளவில் வீடுகளை சூழ்ந்துள்ளது.
கடந்த 13, 14 ஆகிய நாட்களில் கனமழை பெய்த பிறகு சென்னையில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் பல இடங்களில் முழுமையாக வடிந்து இருந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே தண்ணீர் வடியாமல் தேங்கி இருந்தது.
இந்த நிலையில் சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடர்ந்து பெய்த மழையால் சென்னை மக்கள் மீண்டும் கடுமையான அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சென்னை மாநகரில் 1 லட்சத்துக்கும் அதிகமான தெருக்கள் உள்ளன. இதில் தாழ்வான இடங்களில் உள்ள 300 தெருக்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும், போலீசாரும் ஈடுபட்டு உள்ளனர்.
கடந்த முறை மழை வெள்ளம் தேங்கிய இடங்களிலேயே மீண்டும் மழை நீர் தேங்கி உள்ளது.
சென்னையில் நேற்று பெய்த மழை காரணமாக 63 பகுதிகளில் உள்ள 151 தெருக்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இந்த தெருக்களில் 47 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.
இதற்கிடையே அதி கனமழை நாளை வரை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இன்றும், நாளையும் மழை தொடர வாய்ப்புள்ளது.
நேற்று இரவு பெய்தது போன்று மழை நீடித்தால் சென்னையில் வெள்ளம் தேங்கி உள்ள இடங்களில் தண்ணீர் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையில் வெள்ளம் தேங்கும் பகுதிகளில் மீண்டும் மழை வெள்ளம் தேங்காத அளவுக்கு சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதற்கான ஆய்வு பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வடிகால்களை முறையாக பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி அறிவுரை வழங்கி உள்ளார்.
பொதுமக்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலர் தங்களது வீடுகளில் தேங்கும் குப்பைகளை கால்வாயில் கொட்டுவதும், மழை வெள்ளம் தேங்கி இருக்கும் நிலையிலும் குப்பைகளை வெள்ளத்திலேயே வீசுவதும் பல இடங்களில் தற்போதும் தொடருகிறது.
இது தொடர்பாக அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார்கள். குப்பைகள் கால்வாய்களில் தேங்குவதாலேயே தண்ணீர் வடியாமல் உள்ளது எனவும் கால்வாய்களை பராமரிக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.