ஹன்சிகா மீது போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்!
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ‘மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
அதில் இந்துக்கள் புண்ணிய பூமியாக கருதப்படும் காசியின் பின்னணியில், காவி உடை அணிந்தபடி, புகை பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை கோர்ட்டில் ஹன்சிகா மீது வழக்கு போடப்பட்டது.
இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஹன்சிகா மீது இந்து மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் இன்று புகார் செய்யப்பட்டது. அந்த அமைப்பின் நிறுவன அமைப்பாளர் நாராயணன் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-
சினிமா துறையில் இந்து மதக் கடவுள்கள், இந்து மத துறவிகளை விமர்சிப்பது, அவர்களை குற்றவாளி போல் சித்தரிப்பது வாடிக்கையாக உள்ளது.
இதற்கு உதாரணமாக சமீபத்தில் சென்னை முழுவதும் மஹா திரைப்படத்தின் முன்னோட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த சுவரொட்டியில் நடிகை ஹன்சிகா துறவி உடை அணிந்து புகை பிடிப்பது போன்ற காட்சி இந்து மதத்தில் உள்ள பெண் துறவிகளை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது.
இந்து மதத்தின் மீது நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் காட்சி அமைத்த இயக்குனர் ஜமீல் மீதும், போஸ் கொடுத்த ஹன்சிகா மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.