ஹெலிகாப்டரில் ரஜினி கட்-அவுட்டுக்கு மலர் தூவுவதற்கு அனுமதி மறுப்பு!
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படம் நாளை வெளியாகிறது. சேலத்தில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள 5 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்படுகிறது. படம் வெளியாகும் தினத்தன்று ஹெலிகாப்டரில் இருந்து ரஜினிகாந்த் கட்-அவுட்டுக்கு மலர் தூவ, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அனுமதி கேட்டிருந்தனர்.
இதனிடையே, ரஜினி கட்-அவுட்டிற்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ அனுமதி கொடுத்தால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே பொதுமக்கள் நலன் கருதி இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சேலம் வடக்கு மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பிரவீன்குமார் தலைமையில் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் ராமனை சந்தித்து மனு கொடுத்தனர்.
இந்நிலையில், சேலத்தில் ‘தர்பார்’ படம் வெளியீட்டை முன்னிட்டு ரஜினிகாந்த் கட்-அவுட்டிற்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இது குறித்து சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை கூறியதாவது:- ‘தர்பார்’ படம் திரையிடப்படும் தியேட்டர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ளது.
எனவே எப்போது பார்த்தாலும் அந்த சாலையில் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். எனவே பொது மக்களின் பாதுகாப்பை கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், ரஜினிகாந்த் கட்-அவுட்டிற்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ரஜினிகாந்த் கட்-அவுட்டிற்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ போலீசார் அனுமதி மறுத்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.