Tamilசெய்திகள்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தை நாடினார்

ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்தவர் ஹேமந்த் சோரன். நேற்று இவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் ஏழு மணி சோதனைக்குப்பின் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக நேற்றிரவு அவசரமாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு விசாரிக்கிறது. பொறுப்பு தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், நீதிபதி அனுபா ராவத் சவுத்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரிக்கிறது.

ஹேமந்த் சோரன் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக ஆளுநர் மாளிகை சென்று, ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவரும் ராஜினாமா செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டமன்ற தலைவராக சம்பாய் சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சியமைக்க உரிமைக்கோரியும் ஆளுநரிடம் கடிதம் வழங்கியுள்ளனர். இதனால் சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.