X

அரசியல் ஆலோசகர் பிரசாத் கிஷோர் மீது வழக்கு பதிவு

இந்தியாவில் பலராலும் அறியப்பட்டவர் அரசியல் ஆலோசகர் பிரசாத் கிஷோர். பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுத்து கொடுத்தவர். பல ஆட்சி மாற்றங்களுக்கு காரணமாக அமைந்த இவர், தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். திமுகவின் வெற்றிக்காக கட்சி தலைமையிடம் முக்கிய ஆலோசனையை வழங்கி உள்ளார்.

அரசியல் திட்டமிடலில் சிறந்து விளங்குவதாக கூறப்படும் பிரசாந்த் கிஷோர் மீது, பீகார் மாநிலத்தில் கருத்து திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

பீகார் மாநிலம் மோதிஹரியைச் சேர்ந்த ஷாஷ்வத் கவுதம் என்பவர், சமீபத்தில் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், தனது அரசியல் வியூகமான ‘பீகார் கி பாட்’ என்ற கருத்தை பிரசாந்த் கிஷோர் திருடி, ‘பாட் பீகார் கி’ என மாற்றி, பிரச்சார இயக்கத்தை நடத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இதற்கு முன்பு தன்னுடன் வேலைபார்த்த ஒசாமா என்பவர், கிஷோருக்கு இந்த யோசனையையும், வியூகத்தையும் கொடுத்ததாகவும், கிஷோர் அதை தனது சொந்த பிரச்சாரத்திற்கு இதே பெயரில் பயன்படுத்தியதாகவும் கவுதம் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் பிரசாந்த் கிஷோர் மீது 420, 406 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் ஒசாமா மீதும் கவுதம் புகார் கொடுத்து, அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒசாமா இதற்கு முன்பு பாட்னா பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட்டவர். கவுதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பீகார் கி பாட் என்ற தனது இணையதளத்தை கடந்த ஜனவரி மாதம் பதிவு செய்ததாகவும், பிரசாந்த் கிஷோர் தனது வெப்சைட்டை பிப்ரவரி மாதம் தொடங்கியதாகவும் கவுதம் குறிப்பிட்டுள்ளார். இதற்கான ஆதாரத்தை காவல்துறையிடம் வழங்கி உள்ளார்.

சமீபத்தில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர், பீகாரில் உள்ள ஒத்த கருத்துடைய இளைஞர்களை ஒருங்கிணைக்கும் வகையில் கடந்த வாரம் ‘பாட் பீகார் கி’ என்ற பிரச்சாரத்தை தொடங்கினார். அடுத்த 10-15 ஆண்டுகளில் பீகாரை முன்னேற்றுவதற்காக, கிஷோருடன் கைகோர்க்க விரும்பும் ஒத்த கருத்து கொண்ட இளைஞர்களை பதிவு செய்வதற்காக இந்த பிரசாரம் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.