Tamilசெய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் விபத்து – தொழிலாளி பலி

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில், கல்லூர் பாலம் அருகில் அருணா என்பவருக்கு சொந்தமான நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலை அமைந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர். தீபாவளி நெருங்கி வருவதால் இங்கு அதிக அளவிலான பட்டாசுகள் தயாரிப்பு பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் திடீரென இந்த பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு வெடி மருந்துகள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் கீழப்பழுவூர் கிராமத்தில் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நிலநடுக்கமோ என்று அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறி ஓடி வந்துள்ளனர். இந்த தீவிபத்து பெரும் சத்தத்தை கிளப்பியதால், பல மைல் கிலோ மீட்டர் அப்பால் உள்ள கிராமங்களிலும் எதிரொலித்துள்ளது.

மேலும் பட்டாசு ஆலையில் இருந்து கரும் புகை அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கிளம்பி உயர எழுந்தது. தொடர்ந்து வெடி பொருட்கள் வெடித்து சிதறியதால், பொதுமக்கள் பக்கத்தில் செல்ல முடியவில்லை. சற்று காயம் பட்டு தப்பி பிழைத்து ஓடி வந்தவர்களை மீட்டு பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்த இடத்தில் இருந்து ஓடி வந்தவர்களில் 10 பேர் குறித்து தகவல் இல்லாததால் அவர்கள் தீவிபத்தில் சிக்கி இருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு வந்த கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா மீட்பு பணிகளை விரைவுபடுத்தினார். இந்த பட்டாசு ஆலையில் கடந்த ஆண்டும் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.