Tamilசெய்திகள்

ஆதித்யா எல்-1 விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்யும் – இஸ்ரோ தலைவர் தகவல்

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், சூலூர்பேட்டையில் உள்ள செங்கலம்மா பரமேஸ்வரியம்மன் கோவிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆதித்யா எல்-1 மாதிரியை வைத்து சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:-

ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் முன் அம்மனின் அருள் பெறுவது வழக்கம். சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டபோது அனைவரது ஆசீர்வாதமும் இருந்தது. சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட்டில் ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. சுமார் 1,470 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்-1 விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்ய உள்ளது.

பூமியில் இருந்து சூரியனை நோக்கி 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாங்ரேஜியன் பாயின்ட்-1(எல்-1) சுற்று வட்டப்பாதையில் செலுத்தப்படும். சந்திரயான்-3 தொடர்பான லேண்ட் ரோவர்கள் நிலவில் வெற்றிகரமாக செயல்படுகிறது. ககன்யான் திட்டம் செயல்படுத்த தயார் நிலையில் உள்ளது. அக்டோபர் முதல் அல்லது 2-வது வாரத்தில், இன்சாட்-3டிஎஸ் ஜி.எஸ்.எல்.வி-மார்க்-2 மூலம் ஏவப்படும். எஸ்.எஸ்.எல்-வி ராக்கெட் அடுத்த மாதம் ஏவப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.