Tamilசெய்திகள்

இந்தியாவில் உள்ள தூதரகத்தில் இருந்து 41 அதிகாரிகளை திரும்ப பெற்றது கனடா

காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார், கனடாவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவின் புலனாய்வு அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம்சாட்டியது. அதோடு இந்திய உயர் தூதர் அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது.

இதற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா நாட்டின் தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு, தூதர்களை வெளியேற்ற உத்தரவிட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தில் இருந்து அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட 41 பேரை கனடா திரும்பப் பெற்றுள்ளது.

இந்த தகவலை கனடா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மெலானி ஜோலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து பாதுகாப்பாக வெளியேற நாங்கள் அனைத்து வசதிகளையும் செய்துள்ளோம் என்று கூறிய அவர், இதற்கான அர்த்தம் எங்களுடைய அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் தற்போது வெளியேறிவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

41 பேரின் தூதருக்கான விலக்கு திரும்பப்பெறுவது இதுவரையும் இல்லாத ஒன்று. மேலும், சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். இருந்தாலும், பழிக்குப்பழி நடவடிக்கையில் இறங்கும் எண்ணம் கனடாவிற்கு இல்லை. கனடா தொடர்ந்து சர்வதேச சட்டத்தை பாதுகாக்கும் வகையில் தொடரும் என்றார்.