Tamilசெய்திகள்

இந்தியா, பாகிஸ்தான் அதிகபட்ச நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் – ஜி7 நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

காஷ்மீர் மாநிலம் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிர் இழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மீது இந்தியா தனது அசுர தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது.

பாகிஸ்தானும் எதிர் தாக்குதல் நடத்தி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தி விட்டு உடனடியாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜி 7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக ஜி 7 நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள கனடா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து , அமெரிக்க நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி நடத்தப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இரு நாடுகளின் ராணுவ மோதல்கள் பிராந்திய ஸ்திரத்தன்மையில் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இரு நாடுகளும் அதிகபட்ச நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

இரு தரப்பிலும் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். எனவே உடனடியாக பதற்றத்தை தணிக்க நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச தாக்குதலை நிறுத்த வேண்டும்.

நிலைமைகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விரைவான மற்றும் நீடித்த ராஜதந்திர தீர்வுக்கு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம். இரு நாடுகளும் உடனடியாக தாக்குதலை நிறுத்தி விட்டு அமைதி திரும்புவதற்காக நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தூதரக ரீதியாக தீர்வு காண தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.