Tamilசெய்திகள்

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை நிறுத்த அமெரிக்கா முயற்சி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அதில் இருந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

கடந்த 7ஆம் தேதியில் இருந்து பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. அத்துடன் எல்லையில் உள்ள இந்திய பகுதிகள் மீது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தியா தாக்குதல் நடத்தியதனால் தான் நாங்களும் தாக்குதல் நடத்துகிறோம் என பாகிஸ்தான் சொல்கிறது. அதேவேளையில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி மட்டுமே கொடுத்து வருகிறோம் என இந்தியா கூறி வருகிறது. இதனால் பதற்றம் தணியவில்லை.

இதற்கு இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க வெளியறவுத்துறை மார்கோ ரூபியோ இரு தரப்பிலும் பேசி வருகிறார்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மார்கோ ரூபியோ பேசியுள்ளார். அப்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் “இந்தியா தாக்குதல் தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம். இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்துவது குறித்து பரிசீலிப்போம். பொறுமையை இழந்ததால்தான் தாக்குதலை தொடங்கினோம்” எனத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில்தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் மார்கோ ரூபி பேசியுள்ளார். அப்போது ஜெய்சங்கர் “இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் அளவிடப்பட்டதாகவும், பொறுப்பானதாகவும் இருந்து வருகிறது. அது அப்படியே உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை தாக்கினால் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்பதை ஜெய்சங்கர் அமெரிக்க அமைச்சரிடம் சூசகமாக தெரிவித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தினால் மட்டும் பதற்றம் தணிய வாய்ப்புள்ளது.