Tamilசெய்திகள்

இமாச்சல பிரதேச சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுக்கு கோர பா.ஜ.க வலியுறுத்தல் – காங்கிரஸ் அதிர்ச்சி

மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அபிஷேக் சிங்கை எதிர்த்து பா.ஜனதா வேட்பாளரை நிறுத்தியதால் தேர்தல் நடத்தப்பட்டது.

68 சட்டமன்ற இடங்களை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ்க்கு 40 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். இதனால் அபிஷேக் சிங்வி எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் 25 எம்.எல்.ஏ.-க்களை கொண்ட பா.ஜனதாவின் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில்தான் காங்கிரஸ் மெஜாரிட்டியை இழந்துள்ளது. இதனால் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என பா.ஜனதா தலைவர்கள் தெரிவித்து வந்தனர். இமாச்சல பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான ஜெய்ராம் தாகூர் எம்.எல்.ஏ.-க்களுடன் சென்று கவர்னர் ஷிவ் பிரதாப் சுக்லாவை சந்தித்தார். அப்போது சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான அரசை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வலியுறுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

“பா.ஜனதா வேட்பாளருக்கான ஹர்ஷ் மகாஜனுக்கு ஆதரவாக குறைவான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்த நிலையில், நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். தார்மீக உரிமை அடிப்படையில் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தை இழந்துள்ளது” என ஜெய்ராம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மேலும் “பட்ஜெட் மீதான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படுவதற்குப் பதிலாக வாக்குகள் பிரித்து எண்ணப்பட வேண்டும். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்பது தானாகவே தெரியவந்து விடும்” என்றார்.

இதற்கிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஆறு பேரை பா.ஜனதா அரியானாவிற்கு அழைத்துச் சென்றுள்ளது என முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு குற்றஞ்சாட்டியுள்ளார். 68 இடங்களை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 35 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு தேவை. காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆறு எம்.எல்.ஏ.-க்கள் மாற்றி வாக்களித்தால் காங்கிரஸ் பலம் 34 ஆக குறைந்து பெரும்பான்மையை இழந்துவிடும்.

பா.ஜனதாவைத் தவிர மற்றவை வரிசையில் 3 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். இவர்கள் பா.ஜனதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க வாய்ப்பு உள்ளது.