Tamilசெய்திகள்

இறந்த குழந்தையின் உடல் அட்டை பெட்டியில் வைத்த விவகாரம் – அமைச்சர் ம.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இறந்து போன பச்சிளம் குழந்தையின் உடல் அட்டை பெட்டியில் வைத்து ஒப்படைத்த சம்பவத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், பிரசவ வலியால் துடித்த பெண்ணை காப்பாற்ற சம்பந்தப்பட்ட நபர் தனியார் மருத்துவமனையை அணுகி உள்ளார். புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதுகாப்பிற்காக மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே வேளையில் குழந்தையை பரிசோதித்தபோது குழந்தை இறந்தது தெரிய வந்தது. அதன்பின், குழந்தையின் உடல் ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தையின் தந்தை போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியதன் அடிப்படையில் குழந்தை உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

அட்டைப்பெட்டியில் வைத்து ஒப்படைக்கப்பட்டது தவறானது என்பதால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பச்சிளம் குழந்தையை அட்டை பெட்டியில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்த விவகாரத்தில் சுகாதாரத்துறை மீது தவறு எதுவும் இல்லை.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை பணியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து 3 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.