Tamilசெய்திகள்

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜரானார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13-ந் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீமான் மீது எஸ்.சி. எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் விசாரணைக்காக ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பபட்டது. இதன்படி இன்று காலை ஈரோடு முதன்மை நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.