Tamilசெய்திகள்

உச்சநீதிமன்றம் எப்போதும் நாட்டின் மக்களுக்காக இருக்கிறது – தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பிரபல தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உச்சநீதிமன்றம் எப்போதும் நாட்டின் மக்களுக்காக இருக்கிறது. உச்சநீதிமன்றம் செல்வம், சமூக அந்தஸ்து, ஜாதி, மதம், பாலினம், அதிகாரத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்காது. உச்சநீதிமன்றத்தில் சிறிய வழக்கு என்று ஏதும் கிடையாது.

உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதித்துறைகளையும் ஆண்கள் மற்றும் பெண்கள் எளிதாக தொடர்பு கொள்வதை உறுதி செய்யும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. நாங்கள் எப்போதும் சாமானிய மக்களுக்காக இருக்கிறோம் என்ற தகவலை அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன்.

சில நேரங்களில் எனக்கு நள்ளிரவில் கூட இ-மெயில் வந்துள்ளது. ஒரு முறை பெண் ஒருவர் மருத்துவ கருக்கலைப்பு தேவை எனக் கூறியிருந்தார். என்னுடைய ஸ்டாஃப்கள் என்னை தொடர்பு கொண்டனர். நாங்கள் அடுத்த நாள் அதற்கான பெஞ்ச் அமைத்தோம். சிலர் வீடு இடிக்கப்பட்டிருக்கலாம், சிலர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம், சிலர் சரணடைய வேண்டிய நிலையில் உடல் நலம் சரியில்லாமல் இருந்திருக்கலாம்… இதுபோன்ற இதயத்தை நொறுக்கும் வழக்குகள் அனைத்தும் தீவிர கவனம் செலுத்தப்படுகின்றன.

எந்த வழக்கும் சிறிய வழக்கு என்று கிடையாது. நாங்கள் ஒவ்வொருவரையும் சமமாக நடத்துகிறோம். சாமானிய மக்களுக்கு ஆதரவாக நிற்பதே எங்கள் நோக்கம். யார் ஆட்சியில் இருந்தாலும், சாதாரண மக்களுக்கு கவலைகள் உள்ளன, சட்டத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய அங்கம் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

சமானிய மனிதன் எந்தவொரு பிரச்சனையை சந்தித்தாலும், முதலில் மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். அங்குள்ள நீதிபதிகளை சந்திப்பது முக்கியமானது என்று நினைத்தேன். மாவட்ட அளவிலான நீதிமன்றங்களை வலுப்படுத்தும்போது, நீதித்துறையுடன் மக்கள் தொடர்பை வலுப்படுத்துகிறோம்.

இவ்வாறு டி.ஓய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.