Tamilசெய்திகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்

உத்தரகாண்ட் மாநில அரசு கடந்த பிப்ரவரி 7-ந்தேதி பொது சிவில் சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதற்காக சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்டது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி அரசால் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவிற்கு, போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநர் குர்மித் சிங் ஒப்புதலுக்கான அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு கடந்த மாதம் 29-ந்தேதி னுப்பி வைத்தார்.

இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாகிறது உத்தரகாண்ட். மசோதா நிறைவேறியதும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி “உத்தரகாண்ட் மாநில வரலாற்றில் இந்த நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது சிவில் சட்டத்தின்படி திருமணம், விவாகரத்து, பரம்பரை மற்றும் சொத்து உரிமை ஆகியவற்றில் அனைத்து பிரிவினருக்கும் ஒரே மாதிரயான சட்ட விதிகள் பின்பற்றப்படும்.