Tamilசெய்திகள்

உத்தர பிரதேசத்தில் 72 பேர் பலியானதற்கு அதிகமான வெயில் காரணமா? – மருத்துவர்கள் குழு ஆய்வு

உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் திடீரென அங்குள்ள மக்களுக்கு தீவிர காய்ச்சல், மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு படையெடுத்தனர்.

மருத்துவமனையில சிகிச்சை பலனளிக்காமல் 72 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15-ந்தேதி 23 பேரும், 16-ந்தேதி 20 பேரும், நேற்று முன்தினம் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. வெப்பநிலை 100 டிகிரியை தாண்டிய வண்ணம் உள்ளது. இதுதான் உயிரிழப்பிற்கு காரணம் என மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆனால், இதுகுறித்து விசாரணை நடத்த லக்னோவில் இருந்து சீனியர் டாக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, கடும் வெயில் காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் முதலில் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக சிகிச்சைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது அதிக வெயில் தாக்கத்திற்கான முதல் அறிகுறி இல்லை. தண்ணீர் தொடர்பான நோய் பாதிப்பாக இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளது. லக்னோ குழுவில் இடம் பிடித்துள்ள சீனியர் டாக்டர் ஏ.கே. சிங் கூறுகையில் ”உயிரிழப்புகள் தண்ணீர் தொடர்பான நோயால் ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமாக ஏற்பட்டதா? என விசாரணை நடத்தப்படும். மேலும், அதிகாரிகள் தண்ணீர் மாதிரியை பரிசோதனை செய்ய வர இருக்கிறார்கள்” என்றார்.

பொதுமக்கள் உயிரிழப்புக்கு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், யோகி ஆதியநாத் ஆட்சியை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ”அரசின் கவனக்குறைவால் உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் பெரும்பாலான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதிக வெப்பம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கனும். கடந்த 6 வருடங்களில் ஒரு மாவட்ட மருத்துவமனை கூட கட்டப்படவில்லை. உயிரிழந்தவர்கள் மிகவும் ஏழை விவசாயிகள். அவர்கள் சரியான நேரத்தில் உணவு, மருந்துகள், சிகிச்சை பெற முடியாததுதான் அதற்கு காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.