Tamilசெய்திகள்

எதிர்கட்சிகளின் கவனத்தை திசை திருப்பும் பா.ஜ.கவின் எண்ணம் பலிக்காது – ராகுல் காந்தி பேச்சு

இந்திய தலைநகர் புது டெல்லியில் ‘பிரதிதின் மீடியா நெட்வொர்க்’ எனும் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வரும் 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ள முக்கிய தலைவருமான ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது:

தெலுங்கானாவில் அனேகமாக வெற்றி பெறுவோம். மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய இடங்களில் வெற்றி உறுதி. ராஜஸ்தான் மாநிலத்தில் நெருக்கமான போட்டியில் இருக்கிறோம். 2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு அதிர்ச்சி காத்து கொண்டிருக்கிறது.

நாங்கள் கர்நாடகா தேர்தலில் முக்கிய பாடம் கற்று கொண்டோம். அதாவது, பா.ஜ.க., தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்கட்சிகளின் கவனத்தை சிதறடிக்க செய்கிறது. கர்நாடகாவில் அதனை உணர்ந்த நாங்கள் எங்கள் கவனத்தை சிதற விடாமல் மக்கள் பிரச்சனையிலேயே கவனம் செலுத்தி வந்தோம். அதனால் பெரும் வெற்றி பெற்றோம். இதை உணர்ந்து கொண்ட நாங்கள் இதனை எதிர் கொள்ள கற்று கொண்டு விட்டோம்.

தற்போது கூட சாதி கணக்கீடு குறித்து பேச விடாமல் கவனத்தை திசை திருப்பி வருகிறார்கள். ‘ஓரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் கூட இந்தியாவின் தலையாய பிரச்சனைகளான வேலைவாய்ப்பின்மை, தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிரான நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றிலிருந்து மக்கள் கவனத்தை சிதறடிக்கத்தான் கொண்டு வருகிறார்கள். எங்களுக்கு பெரும் வியாபார நிறுவனங்கள் நன்கொடை அளிப்பதில்லை. எங்களுக்கு அவர்கள் உதவினால் என்னவாகும் என அவர்களையே கேளுங்கள்.

இவ்வாறு ராகுல் கூறினார்.