Tamilசெய்திகள்

எதிர்க்கட்சிகள் குழுவினர் இன்று மணிப்பூர் செல்கின்றனர் – பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள முடிவு

மணிப்பூரில் கடந்த மே மாதம் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.

இந்த மோதலில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். வன்முறை உச்சத்தில் இருந்தபோது நடந்த பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக, இரண்டு பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அடைய வைத்தது. மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் அங்கு வசித்து வந்த மக்கள் பலர் வீட்டைவிட்டு வெளியேறி பிற மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், I.N.D.I.A கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் குழு இன்று மணிப்பூர் செல்கிறது. அங்கு, இன்றும் நாளையும் மாநிலத்தில் வன்முறையால் உண்டான பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளனர். எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு குழுவில் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய் (காங்கிரஸ்), சுஷ்மிதா தேவ் (திரிணாமுல் காங்கிரஸ்), மகுவா மாஜி (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), கனிமொழி (தி.மு.க.), வந்தனா சவான் (தேசியவாத காங்கிரஸ்), ஜெயந்த் சவுத்ரி (ராஷ்டிரீய லோக்தளம்), மனோஜ் குமார் ஜா (ராஷ்டிரீய ஜனதாதளம்), பிரேமச்சந்திரன் (புரட்சிகர சோஷலிச கட்சி), திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.