Tamilசெய்திகள்

எதிர்க்கட்சிகள் கூட்டம் பா.ஜ.கவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு புறப்பட்டார்.

இந்நிலையில் சென்னை விமான நிலைத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எதிர்க்கட்சிகள் கூட்டம் பா.ஜ.க.வுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. வட மாநிலங்களில் செய்தது போல, தமிழ்நாட்டிலும் அமலாக்கத்துறை மூலம் பா.ஜ.க. அதன் நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அமைச்சர் பொன்முடி மீது போடப்பட்ட பொய் வழக்குதான் இந்த வழக்கு. எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. ஆளுநருடன் தற்போது அமலாக்கத்துறையும் இணைந்துள்ளதால் வருகின்ற தேர்தல் எங்களுக்கு சுலபமாக இருக்கும்.

தன் மீதான வழக்குகளை அமைச்சர் பொன்முடி சட்டப்படி சந்திப்பார். இதற்கெல்லாம் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். எந்த சவாலையும் சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளது. காவிரி மேகதாது அணை விவகாரத்தில், கருணாநிதி எடுத்த முடிவில் நாங்களும் உறுதியாக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.