Tamilசெய்திகள்

கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள் – மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவுவதால் மீனவர்கள் கலக்கம்

மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருகிறார்கள். ஆனால் எண்ணூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட எண்ணெய் கழிவால் கடும் சிரமத்தை சந்தித்து அதில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்கள்.

திருவொற்றியூர், எண்ணூர் சுற்று வட்டார பகுதிகளில் தேங்கி நின்ற எண்ணெய் கழிவுகள் பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் அப்பகுதியில் உள்ள ஜோதிநகர், கார்கில் நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.

இவர்களின் வீடுகளில் படிந்துள்ள எண்ணெய் கழிவுகள் சுவர்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களில் ஒட்டிக் கொண்டுள்ளது. இந்த எண்ணெய் பசையை எவ்வளவோ கழுவி பார்த்தும் அது போகாமலேயே உள்ளது. இப்படி குடியிருப்பு பகுதிகளில் எண்ணெய் கழிவுகளுடன் தேங்கிய வெள்ளம் கொசஸ்தலை ஆற்றின் வழியாக எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் போய் கலந்தது. இப்படி வழிந்தோடிய எண்ணெய் கழிவுகள் கடலில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து வேகமாக பரவி வருகிறது.

தற்போது எண்ணூர் முகத்துவார பகுதியில் மட்டும் 20 கி.மீ. தூரத்திற்கு பரவியுள்ள இந்த எண்ணெய் கழிவு கடலின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதன் காரணமாக காசிமேடு மற்றும் பழவேற்காடு பகுதிக்கும் எண்ணெய் கழிவுகள் பரவி மேலும் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ? என்கிற அச்சம் மீனவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காசிமேடு, பழவேற்காடு பகுதிகள் மீன்பிடி தொழில் அதிக அளவில் நடைபெற்று வரும் பகுதிகளாகும். இந்த பகுதிகளில் எண்ணெய் கழிவுகள் அதிக அளவில் கலந்து விட்டால் ஒட்டு மொத்த மீன்பிடி தொழிலையே அது பாழாக்கி விடும் என்பதால் எண்ணெய் கழிவுகள் வேகமாக பரவுவதை மின்னல் வேகத்தில் செயல்பட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள 8 மீனவ கிராம மக்கள் எண்ணூர் பஜாரில் திரண்டு படகுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 500 பேர் பங்கேற்று எண்ணெய் கழிவுகளை அகற்ற கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.

எண்ணெய் கழிவுகள் தொடர்ந்து கடல் பகுதியில் கலந்தால் அது ஒட்டு மொத்த மீன்வளத்தையே பாதித்து விடும் என்றும், எனவே கழிவுகளை அகற்றி எண்ணூர் கடல் பகுதியை உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும் என்பதே மீனவர்கள் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.

இதற்கிடையே எண்ணூர் எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்காக கடந்த 4 நாட்களாக தொடர் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்காக கடலோர காவல் படையினர் நேற்று முன்தினம் ரசாயன பவுடரை தூவினர்.

ஹெலிகாப்டரில் பறந்த படி தூவப்பட்ட இந்த ரசாயன பவுடரால் எந்த பலனும் ஏற்படவில்லை. எண்ணெய் கழிவுகள் கடலில் மிகவும் கெட்டியாக படிந்து நிற்பதால் ரசாயன பவுடரால் அதனை அகற்ற முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு துறையினர் எண்ணெய் கழிவை அகற்ற களம் இறங்கினார்கள். அவர்கள் எண்ணெய் படலங்களை அகற்றி கரையோரமாக கொண்டு சேர்க்கும் தன்மையுடைய அட்டைகளை படகு மூலமாக எடுத்துச் சென்று கழிவுகள் இருக்கும் பகுதியில் வீசினார்கள். அதற்கும் பலன் கிடைக்கவில்லை.

இதனால் எண்ணூர் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடும் சவாலாக மாறி இருக்கிறது என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கையை இன்று தொடங்க உள்ளனர்.

நவீன எந்திரங்கள் மூலமாக எண்ணெய் கழிவுகளை கடலில் இருந்து உறிஞ்சி எடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக ராட்சத பேரல்கள் கடற்கரை பகுதியில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் மூலமாக எண்ணெய் கழிவுகளை அகற்ற முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.