Tamilசெய்திகள்

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.206 கோடியில் 8 தளங்களுடன் பிரமாண்டமாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. உலகில் உள்ள பெரிய நூலகங்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் கட்டி எழுப்பப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ந் தேதி (அதாவது இ்ன்று) திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதற்காக இன்று பகல் 11.30 மணி அளவில் விமானத்தில் மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் அவர் ஓய்வெடுக்கிறார்.

பின்னர் மாலையில் அங்கிருந்து புறப்பட்டுச்செல்லும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். அதன்பின் போலீஸ் ரிசர்வ் லைன் மைதானத்தில், கலைஞர் நூலக திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளன.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகிறார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்று பேசுகிறார். அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார், எச்.சி.எல். நிறுவன தலைவர் ரோஷிணி நாடார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர். பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திர மோகன் நன்றி கூறுகிறார். விழாவில் 3 ஆயிரத்து 500 கல்லூரி மாணவர்களும், 6 ஆயிரத்து 500 பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.