Tamilசெய்திகள்

குளிர்காலத்தில் தெலுங்கானாவில் அமோகமாக விற்பனையாகும் பீர் – 20 நாடில் ரூ.1470 கோடிக்கு பீர் விற்பனை

தெலுங்கானாவில் தேர்தலையொட்டி மது விருந்து களைகட்டி உள்ளது.

அரசியல்வாதிகள் வேட்பாளர்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வாக்காளர்களுக்கு பிடித்தமான மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து இருந்தனர். வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு தினமும் மதுபானங்களை வழங்கி உற்சாகப்படுத்தினர். எப்போதும் கோடை காலங்களில் மட்டுமே பீர் விற்பனை அதிகரித்து காணப்படும். ஆனால் தெலுங்கானாவில் வித்தியாசமாக குளிர்காலமான நவம்பர் 1-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை 20 நாட்களில் 22 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 12 லட்சம் பெட்டி விற்பனையாகி இருந்தது. பீர் வகைகளுடன் ஒப்பிடும்போது ஹாட் வகை மதுபான விற்பனை மந்தமாக உள்ளதாக தெரிவித்தனர்.

நவம்பர் 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் ரூ.1,470 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. வருகின்ற 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நாளை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதனால் இன்று காலை முதலே மது பிரியர்கள் ஏராளமானோர் மதுபான கடைகளை நோக்கி படையெடுத்தனர். இதனால் மதுக்கடைகள் முன்பாக திருவிழா கூட்டம் போல் மது பிரியர்கள் குவிந்தனர். தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர்.