Tamilசெய்திகள்

கேரளாவில் கன மழை – 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. பின்பு ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. தற்போது ஒருசில மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

இந்த கனமழை 27-ந்தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கேரள கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், விழிஞ்சம் முதல் காசர்கோடு வரை 2.8 மீட்டர் முதல் 3.3 மீட்டர் உயரம் வரை அலைகள் வீசக்கூடும் எனவும் கடல்சார் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் வருகிற 28-ந் தேதி வரை கேரளா-கர்நாடகா கடற்கரை மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கனமழை காரணமாக வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால், வயநாடு மாவட்டத்தில் மண் அள்ளும் இயந்திரங்களை பயன்படுத்தும் சுரங்க நடவடிக்கைகள் மற்றும் கட்டுமான தள செயல்பாடுகளுக்கு மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார்.

கனமழையால் மண் சரிந்து சாலையில் பாதுகாப்பு சுவர் சேதமடைந்து இருப்பதால் மானந்தவாடி-கைதக்கல் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல நெடுஞ்சாலைத்துறை தடை விதித்துள்ளது.