Tamilசெய்திகள்

சூரத்தில் கட்டப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடம் – நவம்பர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. இங்கு வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து செயல்படும் விதத்தில் ‘சூரத் வைர பங்குச்சந்தை’ என்ற மகா பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

சூரத் வைர நகரில், 35 ஏக்கர் நிலப்பரப்பில், தலா 15 மாடிகளை கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை இணைக்கும் முதுகெலும்பு போல ஒரு மைய கட்டிடம் அமைந்திருக்கிறது.

இந்த அலுவலக கட்டிட வளாகத்தின் மொத்த தள பரப்பளவு 70 லட்சத்து 10 ஆயிரம் சதுரஅடி ஆகும். டெல்லியைச் சேர்ந்த கட்டிடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ், சுமார் 4 ஆண்டுகளில் இந்த கட்டிடத்தை கட்டி முடித்துள்ளது. மொத்த பட்ஜெட் ரூ.3 ஆயிரம் கோடி. சுமார் 80 ஆண்டுகளாக உலகிலேயே மிகப் பெரிய அலுவலக கட்டிடமாக இருந்த பென்டகனை சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் முந்தியுள்ளது.

ஆனால் இந்த திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியான மகேஷ் காதவி, ‘பென்டகை முந்துவது எங்கள் நோக்கமல்ல. தேவை அடிப்படையிலேயே இந்த கட்டிடம் அமைந்துள்ளது. இதனால், வைரத் தொழிலில் ஈடுபடுவோர் இனி தினமும் மும்பை செல்லவேண்டிய தேவையில்லை’ என்று கூறியுள்ளார்.

வருகிற நவம்பர் மாதம் இந்த அலுவலக கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘இந்த கட்டிடம், சூரத் வைரத் தொழில்துறையின் ஆற்றல், வளர்ச்சியை காட்டுகிறது. இந்திய தொழில்முனைவு ஊக்கத்தின் அத்தாட்சியாகவும் திகழ்கிறது’ என்று மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இங்குள்ள 4 ஆயிரத்து 700 அலுவலகங்களையும், கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்பே வைரத் தொழில் நிறுவனங்கள் வாங்கிவிட்டன என்பது கூடுதல் தகவல்.