Tamilசெய்திகள்

சென்னையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை

சென்னையில் நேற்று காலையில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. அதே நேரத்தில் புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. நேற்று மாலை மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னை முழுவதும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது. விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

இன்று காலையிலும் மழை தொடர்ந்து தூறிக் கொண்டே இருந்தது. சென்னை மட்டுமின்றி அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இந்த நிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் கூறியதாவது:-

சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னை முழுவதும் மிக அதிக அளவில் மழை கொட்டியது. அதிகபட்சமாக பெருங்குடியில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது.

மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 3 அல்லது 4 நாட்கள் நீடிக்கும். மேக கூட்டங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக இன்று தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 4 நாட்களுக்கு பிறகு மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:- மீனம்பாக்கம்-16 செ.மீ. பெருங்குடி-16 செ.மீ. ஆலந்தூர்-15.6 செ.மீ. அடையாறு-13.6 செ.மீ. முகலிவாக்கம்-13.5 செ.மீ. ராயபுரம்-13.3 செ.மீ. வளசரவாக்கம்-11.3 செ.மீ. செம்பரம்பாக்கம்-10.7 செ.மீ. அண்ணாநகர்-10.1 செ.மீ. மதுரவாயல்-10.1 செ.மீ. அண்ணா பல்கலைக்கழகம்-9.6 செ.மீ. தரமணி-12 செ.மீ. ஜமீன் கொரட்டூர்-8.4 செ.மீ. பூந்தமல்லி- 7.4 செ.மீ. நுங்கம்பாக்கம்-7 செ.மீ.