Tamilசெய்திகள்

சென்னை திருமங்கலத்தில் 12 மாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரெயில் இயக்க திட்டம்

சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மெட்ரோ ரெயில் சேவை மிக முக்கியமானது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர். தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரெயில் சேவையை விரிவாக்கம் செய்யும் திட்டங்களும் தீட்டப்பட்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில் வெளிநாடுகளில் இருப்பது போன்று அடுக்குமாடி கட்டிடங்கள் வழியாக மெட்ரோ ரெயில்கள் செல்லும் வகையில் சென்னை திருமங்கலம் பகுதியில் 12 மாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரெயில்கள் செல்லும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், கட்டிடங்கள், மக்கள், செயல்பாடுகள் மற்றும் பொது போக்குவரத்தை ஒன்றாக கொண்டுவருவதற்காக மெட்ரோ நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் வகையில் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டு திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். 3 இடங்களில் நிலையங்களை கட்டுவதற்கான செலவு 2-ம் கட்ட திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. இதற்காக மாநில அரசிடம் நிதி கோருவோம் என்றார்.

இந்த திட்டத்திற்காக திருமங்கலத்தில், மேம்பாலம் அருகே முன்பு 3 வீடுகள் இருந்த 450 மீட்டர் நீளமுள்ள நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. திருமங்கலத்தில் உள்ள மேம்பாலத்திற்கு மேல் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் ஒருங்கிணைந்த நடைபாதையை உருவாக்க வேண்டியுள்ளது. ஆனால் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் மேம்பாலத்தை அகற்ற வேண்டியது இருக்கும் என்றார். மேலும், கோயம்பேடு மெட்ரோ நிலையத்தை 2-ம் கட்டமாக விரிவாக்கம் செய்யவும், ஆவடிக்கு 3-வது வழித்தடத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டு 3 வழித்தடங்களையும் இணைக்கும் பொதுவான பாதை அமைக்கப்படும்.திருமயிலையில் குறைந்தபட்சம் 5 இடங்களில் உள்நுழைவு பகுதி அல்லது வெளியேறும் இடங்களில் ஒன்று புதிய பல மாடி கட்டிடத்தில் இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விம்கோ நகர் நிலையத்திற்கு மேலே 20 அடுக்கு மாடி கட்டிடம் மற்றும் 4 அடுக்கு கார் பார்க்கிங் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற வசதிகள் பல இடங்களில் உள்ளன. சீனாவில் சோங்கிங் பகுதியில் 19 மாடி குடியிருப்பு வளாகத்தில் 6-வது மாடியில் மெட்ரோ நிலையம் உள்ளது. இந்தியாவிலும் கூட, நாக்பூரில் உள்ள ஜீரோ மைல் மெட்ரோ நிலையத்திற்கு மேலே 15 அடுக்கு நட்சத்திர ஓட்டல் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது 3 மாடி வாகன நிறுத்தும் இடத்திற்கு மேலே கட்டப்பட்டுள்ளது. எப்போதும் ரெயில்கள் முழுவதுமாக ஓடினாலும் இயக்க செலவு மற்றும் கடனை திருப்பி செலுத்துவதற்கு வெறும் டிக்கெட் வருவாயை கொண்டு சமாளிக்க முடியாது. எனவே, விளம்பரங்கள் வைப்பது, மெட்ரோ நிலையங்களில் சில்லறை விற்பனை நிலையங்களை அனுமதிப்பது மற்றும் சொத்துக்களை உருவாக்குவது போன்றவையே அதிக வருவாய் ஈட்டுவதற்கு ஒரே வழி என கூறப்பட்டுள்ளது.