Tamilசெய்திகள்

ஜாபர் சாதிக்கின் கென்யா பயணம் குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை

டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய அதிரடி சோதனையில் சென்னையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளரும் அரசியல் பிரமுகருமான ஜாபர் சாதிக் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் இருந்து சூட்டோ பெட்டரின் என்கிற போதைப்பொருளை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு தனது உணவு பொருள் ஏற்றுமதி குடோனில் இருந்து ஜாபர் சாதிக் அனுப்பி வைத்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்ததையடுத்து தி.மு.க. அயலக அணி பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

கடந்த சில ஆண்டுகளாகவே போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ள ஜாபர் சாதிக் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதைப்பொருட்களை அனுப்பி வைத்திருக்கலாம் என்று பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து சென்னை மயிலாப்பூர் சாந்தோமில் உள்ள அவரது வீட்டுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விரைந்தனர். ஆனால் வீட்டை பூட்டி விட்டு ஜாபர் சாதிக் தலைமறைவானார். இருப்பினும் பூட்டை உடைத்து அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினார்கள். பின்னர் வீட்டுக்கு சீல் வைத்தனர்.

ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று விடக்கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீசும் கொடுக்கப்பட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஜாபர் சாதிக்கின் வீட்டு முன்பு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகிறார்கள்.

இதன் அடிப்படையில் ஜாபர் சாதிக்கை பிடிக்க அதிரடி வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. சினிமா வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் தனது பண பலத்தால் ஜாபர் சாதிக் ஏராளமான நண்பர்களை சம்பாதித்து உள்ளார். தமிழ் சினிமா டைரக்டர் ஒருவருடன் கை கோர்த்துக்கொண்டு செயல்பட்ட ஜாபர் சாதிக் அவரை பங்குதாரராக ஆக்கி தொழில்களையும் செய்து வந்துள்ளார்.

இதே போன்று தி.மு.க. அயலக அணியில் பொறுப்பு வாங்குவதற்கும் அரசியல் நண்பர்கள் பலரும் உதவி செய்துள்ளனர். இப்படி சினிமா மற்றும் அரசியலில் ஜாபர் சாதிக்கின் நெருங்கிய நண்பர்கள் யார்-யார்? என்பதை கண்டுபிடித்து அவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ள அதிகாரிகள் அடுத்தகட்டமாக சம்மன் அனுப்பி நேரில் வரவழைக்க உள்ளனர். இப்படி நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்துவதன் மூலமாக ஜாபர் சாதிக் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஜாபர் சாதிக் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்தே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறை சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கடந்த மாதம் 15-ந் தேதி டெல்லியில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகளான முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக்குமார் ஆகியோர் சிக்கினார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் தேதி டெல்லியில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகளான முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக்குமார் ஆகியோர் சிக்கினார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் ஜாபர் சாதிக் மிகப் பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது.

இதற்கிடையே ஜாபர் சாதிக் பலமுறை கென்யா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருப்பதை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். ஜாபர் சாதிக்குடன் அவரது நண்பர்கள் பலரும் கென்யாவுக்கு பயணம் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கென்யாவில் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை சந்திப்பதற்காக ஜாபர் சாதிக் அங்கு சென்றிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து ஜாபர் சாதிக்கின் கென்யா பயணத்தின் பின்னணி குறித்தும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முழுமையான விசாரணையில் இறங்கி உள்ளனர். இதன் முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.