Tamilசெய்திகள்

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மின கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், கடலோர தமிழகப் பகுதிகளில் கன மழை பெய்தது. சென்னையில் 2 நாட்கள் பலத்த மழை கொட்டியது.

அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து புயலாக மாறி ஒடிசா, மேற்கு வங்கம் கடல் பகுதிக்கு நகர்ந்து சென்றதால் தமிழகத்தில் எதிர்பார்த்த மழை பெய்யாமல் குறைந்தது. இந்த நிலையில் குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 24-ந்தேதி வரை அநேக இடங்களில லேசான மழையும், ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் 22, 23 மற்றும் 24-ந் தேதியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.

இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் இன்று லேசான மழை பெய்யும்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் பருவமழை மேலும் தீவிரம் அடைகிறது. அடுத்து வருகின்ற 4 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை துறை மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் முன்எச்சரிக்கையுடன் மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.