Tamilசெய்திகள்

தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக பா.ஜ.க உடன் கூட்டணி அமைத்தோம் – அன்புமணி ராமதாஸ் விளக்கம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் இல்லத்தில் இன்று காலை இரு கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் பா.ஜனதா- பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ஜனதா கூட்டணியில் பாமக-வுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பா.ஜனதாவுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி வருமாறு:-

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று பா.ம.க. முடிவு செய்துள்ளது. நாட்டின் நலன் கருதியும், பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக வேண்டும் என்கிற எண்ணத்திலும், தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரவுமே இந்த முடிவை எடுத்துள்ளோம்.

தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஆள்பவர்களை மாற்ற வேண்டும் என்று மக்கள் ஆழமாகவே எண்ணுகிறார்கள். அதனை கருத்தில் கொண்டு நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.

இதையடுத்து தமிழகத்தில் மாற்றம், முன்னேற்றம் அன்புமணி என்கிற கோஷத்தை முன்வைத்தீர்களே? அது என்ன ஆனது? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அன்புமணி பதில் அளிக்கவில்லை.