Tamilசெய்திகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்து உள்ள நிலையில் இயல்பான அளவைவிட குறைவாகவே பெய்துள்ளது. வழக்கமாக நவம்பர் மாதத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவைவிட குறைவாகவே பெய்துள்ளது. வங்கக்கடலில் ஒரே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தீபாவளிக்கு முன்பு மழை பெய்தது. தமிழகத்தில் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்த போதிலும் வட மாவட்டங்களில் போதுமான அளவு பொழிவு இல்லை.

வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழக கடலோரம் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் 27-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று (22-ந்தேதி) அநேக இடங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் அநேக இடங்களில் லேசான மழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும். 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. இடை இடையே விட்டு விட்டு பெய்த மழை விடிய விடிய பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலையிலும் பலத்த மழை பெய்தது.