Tamilசெய்திகள்

தமிழக பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் நாளை மேலிடத்தில் ஒப்படைக்கப்படுகிறது

பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தொடங்கி தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் தேதி அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் 3-வது தடவையாக வெற்றி பெற்று பாரதிய ஜனதா ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி இந்த தடவை 2014 மற்றும் 2019 -ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். குறிப்பாக 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பதை அவர் இலக்காக வைத்து நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் இலக்கை நிறைவேற்றும் வகையில் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் மிக கவனமுடன் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். பாரதிய ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில் 195 பேர் இடம் பெற்றுள்ளனர். அந்த பட்டியலில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இராணி, சபாநாயகர் ஓம்பிர்லா உள்பட பலரது பெயர்கள் இடம்பெற்று இருந்தன. ஆனால் அந்த பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நாளை (புதன்கிழமை) டெல்லியில் நடைபெற உள்ளது. பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் 2-வது பட்டியலில் இடம் பெறும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வெற்றி வாய்ப்புள்ள பல்வேறு மாநிலங்களில் இருக்கும் பா.ஜ.க. பிரமுகர்களுக்கு இந்த 2-வது பட்டியலில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக டெல்லி மேலிட தலைவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் வேட்பாளர்களை பரிந்துரை செய்யுமாறு கேட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை பரிந்துரைக்குமாறு டெல்லி மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுபற்றி நேற்று சென்னையில் தமிழக பா.ஜனதா மையக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து தொகுதிக்கும் உத்தேச வேட்பாளர்கள் பெயர்களை தயார் செய்தனர்.

இந்த பட்டியல் நாளை (6-ந்தேதி) டெல்லி தலைமையிடம் ஒப்படைக்கப்படும் என்று மையக்குழு உறுப்பினர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் கூறினார். இதற்கிடையில் ஒவ்வொரு தொகுதியிலும் கட்சி நிர்வாகிகளிடமும் யாரை வேட்பாளராக போடலாம் என்று கருத்து கேட்டு பட்டியலை தயாரித்து தரும்படி கட்சி மேலிடம் கேட்டுள்ளது.

கருத்து கேட்பதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு சென்று பா.ஜ.க. நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டனர். யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று கருத்து கேட்டு பெயர்களை பதிவு செய்து கொண்டனர்.

இந்த கருத்து கேட்பு கூட்டம் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் மண்டல தலைவர்கள், மண்டல பார்வையாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணிகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள், மாநில அணிகள், பிரிவுகளின் நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டது.

வடசென்னையில் முன்னாள் எம்.பி., கே.பி. ராமலிங்கம், கராத்தே தியாக ராஜன் ஆகியோரும், தென்சென்னையில் மத்திய மந்திரி முருகன், ஏ.பி.முருகானந்தம் ஆகியோரும் மத்திய சென்னையில் டாக்டர் கனகசபாபதி, முன்னாள் மேயர் கார்த்தியாயினி ஆகியோரும் கருத்து கேட்டனர். இதேபோல் திருவள்ளூர் தொகுதியில் சதீஷ்குமாரும், ஸ்ரீபெரும்புதூரில் அரவிந்த் மேனன், முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத் ஆகியோரும் கருத்து கேட்டனர். காஞ்சிபுரம் தொகுதியில் எம்.முருகானந்தம், ஆர்.சி.பால்கனகராஜ், அரக்கோ ணத்தில் பாலகணபதி, சந்திரன் ஆகியோரும் கருத்து கேட்டார்கள்.

இந்த கருத்து கேட்பின் போது, “நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும் ஒரு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. அந்த படிவத்தில் பாராளுமன்ற தொகுதி பெயர், மாவட்டம், கருத்து சொல்லும் நிர்வாகியின் பெயரை பூர்த்தி செய்து 3 வேட்பாளர்களின் பெயர்களை வரிசைப்படுத்தி பூர்த்தி செய்ய வேண்டும். அந்த படிவத்தில் கையெழுத்திட்டு கருத்து கேட்பு குழுவிடம் வழங்க வேண்டும்.

இந்த படிவங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு தொகுதி வாரியாக நிர்வாகிகளின் ஆதரவின் அடிப்படையில் மூன்று வேட்பாளர்கள் பெயர் தயார் செய்யப்படும். இந்த பட்டியலும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும். டெல்லியில் நடக்கும் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து வந்துள்ள பட்டியலை மூத்தத லைவர்கள் ஆய்வு செய்வார்கள். 39 தொகுதிகளில் குறிப்பிட்ட 12 தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்த பா.ஜ.க. மேலிட தலைவர்கள் ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர்.

அந்த தொகுதிகளில் வேட்பாளர்களாக யார்-யாரை தேர்வு செய்யலாம் என்பது நாளைய கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. இது போல மற்ற மாநிலங்களிலும் வேட்பாளர்களை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
நாளை பா.ஜ.க.வின் அந்த 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் தமிழகத்தில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் தகவல்களும் இடம் பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.