Tamilசெய்திகள்

தமிழக முழுவதும் 55 ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை

அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி பயிரிடுவது பாதிக்கப்பட்டதாலும், ஜூன் மாத இறுதியில் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.120 வரை உயர்ந்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி, தக்காளி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் கூட்டுறவுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கூட்டுறவுத்துறையின் கீழ் சென்னையில் செயல்படும் 27 பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 2 நகரும் பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் முதற்கட்டமாக வடசென்னையில் 32 ரேஷன் கடைகளிலும் மத்திய மற்றும் தென் சென்னையில் தலா 25 ரேஷன் கடைகள் என மொத்தம் 82 கடைகளிலும், மாநிலத்தில் பிற பகுதிகளில் 215 கடைகள் என மொத்தம் 302 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதிப்படையாமல் தடுக்கும் வகையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் தக்காளி விற்பனை 302 ரேஷன் கடைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் தக்காளி விற்பனையை 500 ரேஷன் கடைகளுக்கு நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு, இன்று முதல் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 67 பண்ணை பசுமைக்கடைகள், 500 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று வரை 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 500 ஆக உயர்ந்துள்ளது. நபர் ஒருவருக்கு 1 கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சென்னையில் மலிவு விலையில் தக்காளி வாங்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து வாங்கி சென்றனர்.