Tamilசெய்திகள்

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும்? – தொண்டர்களுக்கு டாக்டர்.ராமதாஸ் கடிதம்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

என் தாயின் கருவறையில் இருந்து பூமித்தாயின் மடிக்கு நான் இடம் பெயர்ந்து இன்று (25.07.2023) 84 ஆண்டுகள் நிறைவடைந்து 85-ம் ஆண்டு தொடங்குகிறது. இந்த இனிமையான தருணத்தில் என்னினும் இளையவர்களை வாழ்த்துகிறேன். மூத்தவர்களிடமிருந்து வாழ்த்துகளைக் கோருகிறேன். பொதுவாக மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்கள் தான் தேர்வுக் காலம். ஆனால், என்னைப் பொறுத்தவரை ஜூலை மாதம் தான் எனக்கு தேர்வுக் காலம். ஜூலை 16-ம் நாள் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாள், ஜூலை 20-ம் நாள் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள். ஜூலை 25-ம் நாள் எனது பிறந்தநாள். ஜூலை மாதத்தில் இரு அமைப்புகளின் செயல்பாடுகளையும், எனது செயல்பாட்டையும் ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால் அது தேர்வு மாதம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகளையும், வன்னியர் சங்கத்தின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்யும் போது, அவற்றில் வலிகளும் நிறைந்திருக்கும், மகிழ்ச்சியும் பொங்கி வரும். ஆனால், எனது பிறந்தநாள் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான தருணம் தான். என்னை அறிந்தவர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லையில்லா அன்பை நான் காட்டுவதும், என்னை அறிந்தவர்கள், என்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் தங்களையும் தருவதற்கு தயாராக இருப்பதும் தான் மகிழ்ச்சிக்கு காரணம். பாசமிக்கத் தமிழ்ச் சொந்தங்களும், பாட்டாளி சொந்தங்களும் என்னை அய்யா என்று அழைப்பதற்கு, உலகில் உள்ள எந்த அதிகார பதவியும் ஈடு இணை அல்ல. அதிகார பதவிகளையும், பணத்தையும் கொண்டிருப்பவர்களைச் சுற்றிலும் கூட்டம் இருக்கும். அது அவர்களுக்கான கூட்டம் அல்ல… அவர்களிடம் உள்ள பணம் மற்றும் பதவிக்கான கூட்டம். என்னிடம் பணமும் இல்லை… பதவியும் இல்லை. ஆனால், என்னிடம் பெரும் கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டம் என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்கும் கூட்டம் அல்ல… மாறாக, எனக்காக எதையும் தியாகம் செய்யும் கூட்டம்.

இது பெருமைக்காக சொல்லும் வசனம் அல்ல. உண்மை. நான் கடந்து வந்த பாதை மலர்களால் ஆனதல்ல. முட்களால் ஆனது தான். அந்தப் பயணத்தில், மிக, மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு சமூக நீதி பெற்றுத் தருவதற்காக எனது அறைகூவலை ஏற்று, எதையும் எதிர்பார்க்காமல் களமிறங்கி, துப்பாக்கி குண்டுகளையும், காவல் துறையினரின் குண்டாந்தடி தாக்குதல்களையும் தாங்கி 21 சொந்தங்கள் உயிர்த் தியாகம் செய்தனர். ஒவ்வொரு வினாடியும் அவர்களை வணங்குகிறேன். நான் பார்த்து வளர்ந்த மக்களை அந்தச் சூழலில் இருந்து மீட்க வேண்டும்; கல்வியும், வேலையும் பெற்று வாழ்வில் முன்னேறுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற வேட்கை எனக்குள் பிறந்தது. அதன் பயன் தான் எனது பொது வாழ்வுப் பயணம் ஆகும்.

எனது பொதுவாழ்வுப் பயணத்தில் அரசியல், சமூக நீதி, இனம், மொழி, இயற்கை, சுற்றுச்சூழல் சார்ந்து என்னென்ன இலக்குகளையெல்லாம் நான் வரித்துக் கொண்டேனோ, அந்த இலக்குகளை எனது 44 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் இன்னும் முழுமையாக என்னால் அடைய முடியவில்லை. * தமிழ்நாட்டின் நிர்வாகத்தில் அன்னை தமிழுக்கு அரியணை அளிக்கப்பட வேண்டும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். * தமிழ்நாட்டில் பெய்யும் மழையில் ஒரு சொட்டு நீர் கூட வீணாக கடலில் கலக்காத நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்.

* ஒரு சொட்டு மது கூட இல்லாத அளவுக்கு முழுமையான மதுவிலக்கு ஏற்படுத்த பட வேண்டும்.
* ஒரு புகையிலை கூட இருக்கக்கூடாது. அனைத்து வகை புகையிலைப் பழக்கங்களில் இருந்தும் மக்கள் மீட்கப்பட வேண்டும்.
* கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இந்த இலக்குகளை இதுவரை முழுமையாக அடைய முடியவில்லை என்றாலும் கூட, அதை நோக்கிய பயணத்தில் பெருந்தொலைவை அடைந்துவிட்டோம். இந்த இலக்குகளை இன்னும் சில ஆண்டுகளில் முழுமையாக எட்டி விடுவோம் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சி என்ற இலக்கை எட்டுவதற்கு இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? இந்த வினா தான் என்னை வாட்டிக் கொண்டிருக்கிறது.

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் அதை விட சிறந்த மகிழ்ச்சி இல்லை.. நினைத்ததெல்லாம் நடக்காவிட்டால் அதை நினைத்து முடங்கி விடத் தேவையில்லை. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும். என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப வெற்றிகளை சாத்தியமாக்க அனைவரும் கடுமையாக உழைப்போம்.

அரசியல் இலக்கை அடைவோம் என்று அனைவருக்கும் தெவித்துக் கொள்கிறேன். பாட்டாளிகள் இல்லாமல் என் வாழ்க்கை இல்லை, தமிழ்ச்சொந்தங்கள் இல்லாமல் நான் இல்லை. என் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்காக உழைப்பதே எனது விருப்பமும், மகிழ்ச்சியும் ஆகும். இந்த பணியை நான் என்றும் தொடர்வேன் என்று எனது முத்துவிழாவில் நான் அளித்த வாக்குறுதியை மீண்டும் ஒருமுறை தமிழ்ச்சொந்தங்களுக்கு புதுப்பித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.