Tamilசெய்திகள்

திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் கமல்ஹாசன் – சுற்றுப்பயண திட்டம் தயாராகி வருகிறது

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று நிச்சயம் ஒரு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. மேல்-சபை எம்.பி. பதவி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக் கொண்டுள்ள கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்து உள்ளார். நாட்டின் நலன் கருதி கை குலுக்க வேண்டிய இடத்தில்கை குலுக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தி.மு.க. கூட்டணி போட்டியிடும் 39 தொகுதிகளிலும் கமல்ஹாசன் தீவிரமாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதையடுத்து அவரது சுற்றுப்பயண திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார். இந்த பிரசாரத்தின் போது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் அ.தி.மு.க.வை கண்டித்தும் பல்வேறு விஷயங்களை கமல்ஹாசன் எடுத்து வைத்து ஆதரவு திரட்ட இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவதற்கு இடம் கிடைக்காத நிலையிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சுறுசுறுப்பாக தேர்தல் பிரசார வேலைகளை தொடங்குவதற்கு திட்டமிட்டு ஆயத்தமாகி வருகிறார்கள். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறும் போது, “பாராளுமன்ற தேர்தலில் எங்கள் தலைவர் கமல்ஹாசனின் பிரசாரம் நிச்சயம் பேசு பொருளாக இருக்கும் என்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு அவரது பிரசாரம் வலு சேர்க்கும்” என்றும் தெரிவித்தார்.