Tamilசெய்திகள்

திமுக தேர்தல் வாக்குறுதியில் சொல்லியதை நிறைவேற்றவில்லை – எடப்பாடி பழனிசாமி பேச்சு

அ.தி.மு. க. அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர் வெற்றிவேல் மகள் திருமணத்திற்கு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தருமபுரி வந்தார். பின்னர் 100 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்தார்.

அப்போது அவர் மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:-

இன்று நடைபெற்ற 100 ஜோடி மணமக்களும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன். அ.தி.மு.க என்பது கழகம், ஒரு குடும்பம் என்பதற்கு இதுவே சான்று. இது அ.தி.மு.க.வில் மட்டுமே நடைபெறும். அ.தி.மு.க ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது.

நாம், பா.ஜ.க கூட்டணியில் இருந்து பிரிந்தது பொறுத்துக்கொள்ள முடியாமல், ஏதேதோ பேசிக்கொண்டு வருகிறார்கள். அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் தி.மு.க தலைவர் தவறான பிரசாரத்தை செய்து வருகிறார். ஏனென்றால் சிறுபான்மையினர் வாக்குகளை தி.மு.க ஏமாற்றி வாங்கி வந்தது. தற்போது நாம் அதை வாங்கி விடுவோம் என்ற அச்சம் வந்துவிட்டது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஏழைப் பெண்களின் திருமணம் தடைப்படக்கூடாது என திருமண உதவி திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் 12 லட்சம் குடும்பத்தினர் பயனடைந்தனர். ஆனால் இந்த விடியா தி.மு.க அரசின் முதலமைச்சர் அதனை நிறுத்தி விட்டார். கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், அம்மா குழந்தைகள் பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் ஏழை மக்களின் வசதிக்காக 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது. வேலைக்கு செல்லும் பெண்களுக்காக அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. பெண்கள் சுய உதவிக் குழுவுக்கு அதிக சுழல் நிதியை கடந்த ஆட்சியில் அ.தி.மு.க வழங்கியது. தற்போது அனைத்தையும் ஆளும் கட்சி நிறுத்தி விட்டது.

நீட் தேர்வு குறித்து, ஸ்டாலின் மற்றும் உதயநிதி பேசி வருகின்றனர். ஆனால் நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க-வும் காங்கிரசும் தான் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்கள். ஏழை பிள்ளைகள் மருத்துவராக வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது. அதில் சுமார் 2000 மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். மேலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தியது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் வினியோகம் செய்யப்படுகிறது. தி.மு.க.வால் தேர்தலில் 520 வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. ஆனாலும் 100 சதவீதம் நிறைவேற்றியதாக முதல்வர் பொய் பேசி வருகிறார். தேர்தல் வாக்குறுதியில் சொல்லியதை நிறைவேற்றவில்லை.

ஆட்சிக்கு வந்தால், அனைத்து பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால் இன்று தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே கொடுப்பேன் என்று சொல்கிறார்கள். அதுவும் முழுமையாக சேரவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.