Tamilசினிமா

திரையரங்குகளுக்காக திரைப்படம் இயக்குவதை நிறுத்துகிறேன் – இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அறிவிப்பு

‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து ‘பிரேமம்’ படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்’, தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

‘பிரேமம்’ படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து இவர் தற்போது ‘கிஃப்ட்’ என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில், அல்போன்ஸ் புத்திரன் சமூக வலைதளப் பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், “திரையரங்குகளுக்காக படங்கள் இயக்குவதை நிறுத்துகிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு உள்ளது, அதை நான் நேற்று கண்டுபிடித்தேன். நான் வேறு யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் தொடர்ந்து பாடல்கள்,வீடியோக்கள், குறும்படங்கள் மற்றும் அதிகபட்சம் ஓடிடி-க்காக இயக்குவேன்.

நான் சினிமாவை விட்டு விலக விரும்பவில்லை, ஆனால் வேறு வழியில்லை. என்னால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நான் கொடுக்க விரும்பவில்லை. உடல்நலம் பலவீனமாக இருக்கும்போது அல்லது கணிக்க முடியாத வாழ்க்கை இடைவேளை பஞ்ச் போன்ற ஒரு திருப்பத்தைக் கொண்டுவருகிறது” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த பதிவை சற்று நேரத்தில் நீக்கிவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.