Tamilசெய்திகள்

தேர்தல் சீட்டுக்காக பணம் கொடுத்து ஏமாறாதீர்கள் – நிர்வாகிகளை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார்.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சீட்டுக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று நிர்வாகிகளை எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

திருவள்ளூரில் ஒருவர் சீட்டிற்காக ரூ.3 கோடி ஏமாந்ததாகவும் எழுந்த தகவலையும், முன்னாள் அமைச்சர் ஒருவர் சட்டசபை தேர்தல் சீட்டிற்காக ரூ.3 கோடி அளித்து ஏமாந்ததையும், சரவணன் என்ற நபர் ஒருவர் இ.பி.எஸ்.-க்கு நெருக்கமானவர் என கூறி பணம் பெற்றதையும் சுட்டிக்காட்டி அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அ.தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்படும். பணம் பெற்றுக்கொண்டு சீட் வழங்குவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னதாக, அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ரகசியமாக சென்று பா.ஜ.க.வுடன் கூட்டணியை இறுதி செய்தது ஏன் என்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி உருவாவதை தி.மு.க. விரும்பவில்லை. கூட்டணி விவகாரம் குறித்து அ.தி.மு.க.வினர் பொதுவெளியில் பேட்டி கொடுக்க வேண்டாம். அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணியாக மாறும். கூட்டணிக்கு வரும் அனைவருக்கும் முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும்.

பூத் கமிட்டி மிக மிக முக்கியம், அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பூத் கமிட்டியை முறையாக அமைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.