Tamilசெய்திகள்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் எம்.எல்.ஏ, எம்.பி அலுவலகங்கள் பூட்டப்படுகிறது

பாராளுமன்றத்துக்கு தேர்தல் தேதி அநேகமாக வருகிற சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்து விடும்.

அதன் பிறகு முதலமைச்சர் முதற்கொண்டு அமைச்சர்கள் வரை கட்சிப் பணிக்கு செல்லும் போது அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. சொந்த கார் அல்லது தனியார் வாகனங்களை பயன்படுத்தி கட்சி நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும்.
அதுமட்டுமின்றி சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி தோறும் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு இப்போது பொது மக்கள் மட்டுமின்றி கட்சி நிர்வாகிகளும் வந்து செல்கின்றனர். அரசியல் ஆலோசனை கூட்டங்களும் இங்கு நடைபெறுவது வழக்கம்.

ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அங்கு கட்சி நிர்வாகிகள் வரக் கூடாது என்பதற்காக அரசு சார்பில் உள்ள எம்.எல்.ஏ.க் கள், எம்.பி.க்கள் அலுவலகங்களை பூட்ட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிடுவார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களும் இப்போதே தங்களது அலுவலகத்தில் உள்ள சொந்த பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.