Tamilசெய்திகள்

நீல நிறத்தில் அரிய காளான்கள் கண்டுபிடிப்பு – மருந்து தயாரிக்க உதவுமா என்று ஆய்வு

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் வனப்பகுதியில் காவால் புலிகள் காப்பகம் உள்ளது. இந்த வனத்தை ஒட்டிய காடுகளில் அடிக்கடி வனத்துறையினர் ரோந்து சென்று வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு வனக்காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காட்டில் நீல நிற காளான்கள் இருப்பதைக் கண்டனர். இதுவரை எங்கும் பார்த்திடாத வகையில் அறிய காளான்களாக காட்சியளித்தன.

இதுகுறித்து முழுகுவில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவி பேராசிரியர் ஜெகதீஸ் பத்துலா தலைமையிலான குழுவினர் வனப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் காடுகளில் குறைந்த எண்ணிக்கையில் காணப்பட்ட நீல நிறத்திலான காளான்களை எடுத்து வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆராய்ச்சி நிறுவன உதவி பேராசிரியர் ஜெகதீஷ் பத்துலா கூறுகையில்:-

காளான்கள் மருத்துவ குணம் கொண்டது. காளானில் வயிற்று புண்ணை எதிர்க்கும் குணங்கள் இருக்கின்றன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட நீல நிற காளான் ஸ்கை ப்ளூ மஸ்ரூம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காளான்களின் செவுள்களில் இளஞ்சிவப்பு முதல் ஊதா நிறங்கள் உள்ளன. காளான்களில் விஷத்தன்மை உள்ளதா என்பதை கண்டறிந்த பிறகு தான் உணவில் சேர்க்க முடியும்.

இந்த நீல நிற காளான்களில் நச்சுத்தன்மை உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் . தொற்று நோய்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் தொடர்பான நிலைமைகள் உட்பட பல்வேறு நோய்களுக்கான புதிய மருந்துகளை இதன் மூலம் உருவாக்க முடியுமா மருந்துகள் தயாரிப்பதற்கு இது மூலகாரணியாக அமையுமா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

மேலும் காடுகளில் நீல நிற காளான்கள் தென்பட்டால் அவற்றை பொதுமக்கள் உடனடியாக சமையல் செய்து சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.