Tamilசெய்திகள்

பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம்

பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தியதாக பதஞ்சலி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இருவரும் பதில் அளிக்கவில்லை. இந்த வழக்கு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவமதிப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க கேட்டுக்கொண்ட போதிலும் விளக்கம் அளிக்காமல் பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளீர்கள். ஆனால் கோர்ட்டில் பதிலளிக்க வில்லை என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். பதஞ்சலி நிர்வாக இயக்குர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது.

நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் ஏப்ரல் 2-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கிடையே, ஆச்சார்யா பால்கிருஷ்ணா சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், சட்டத்தின் மீது மிகுந்த மரியாதை தனக்கு உண்டு. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படாது என நிறுவனம் உறுதி அளிக்கிறது என தெரிவித்திருந்தார்.

ஆனால், அவர்களது நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மறுப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டமாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். அதன்படி நீதிபதிகள் கூறியதாவது:

பதஞ்சலி நிறுவனத்திற்கு நாங்கள் தாராளமாக இருக்க விரும்பவில்லை. அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் வேண்டுமென்றே கோர்ட் உத்தரவுக்கு கீழ்ப்படியாமல் இருப்பதாகதான் நாங்கள் கருதுகிறோம். அனைவரையும் ஒரே மாதிரிதான் பார்க்கிறோம். இதனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவை யாரும் மீறக்கூடாது என்ற செய்தியை சமூகத்திற்கு கொண்டு செல்லவேண்டும். நீங்கள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கும்போது மிக அலட்சியமாக நடந்து கொள்கிறீர்கள், அதே அலட்சியத்தை நாங்கள் ஏன் உங்களுக்கு காட்டக்கூடாது?

எனவே, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறியுள்ளதால் பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் ஏற்கமுடியாது. உங்களது மன்னிப்பை நாங்கள் நம்பவில்லை. அதனை நிராகரிக்கிறோம். நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் தனிநபர் குறித்த விஷயம் கிடையாது என காட்டமாக தெரிவித்தனர்.

மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள். பதஞ்சலி நிறுவன விவகாரத்தில் யாரெல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கவில்லையோ அவர்கள் அத்தனை பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் உறுதிபட தெரிவித்துள்ளது.