Tamilசெய்திகள்

பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை ரகசியமாக வைத்திருப்பது ஏன்? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி

பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கூட்டம் எதற்காக கூட்டப்ப டுகிறது என்பது குறித்து மத்திய அரசு விளக்கவில்லை. உரிய நேரத்தில் கட்சிகளுக்கு தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நேற்று பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் நடைபெற்றது. அப்போது, சிறப்புக் கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்குப்பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. தெரிக் ஓ’பிரைன் கூறுகையில் “சிறப்புக் கூட்டத்திற்கான திட்டம் எங்கே?. ஏன் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது?. பாராளுமன்ற ஜனநாயகத்தில் கூட்டம் கூடுவதற்கான காரணம் ஏன் ரகசியமாக வைக்கப்படுகிறது?.

இந்த கூட்டத்தை சீர்குலைக்க தேவையான அனைத்து செயல்களையும் பா.ஜனதா செய்யும். நாங்கள் நேர்மறையாக இருப்போம்” என்றார். வழக்கமான கூட்டத்தின்போது கடைபிடிக்கப்படும் கேள்விகள் நேரம் உள்ளிட்ட நடைமுறைகள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் பெயரை பாரத் என மாற்ற இருப்பதாகவும், இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அதேவேளையில் ஒரே நாடு ஒரே தேர்தல், ஜம்மு-காஷ்மீர் மாநில விவகாரம் ஆகியவை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் எனவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. கூட்டத்தில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, மத்திய கட்டமைப்பின் மீது தாக்குதல், விவசாயிகள் நிலை குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.