Tamilசெய்திகள்

பா.ஜ.கவின் 5 வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு – மத்திய மந்திரி வி.கே.சிங் உள்ளிட்ட 23 எம்.பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை

பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். பா.ஜ.க. மட்டும் 370 இடங்களில் வெல்ல வேண்டும் என்பது அவரது விருப்பமாகும். இதற்காக அவர் வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை, பிரசாரம் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

குறிப்பாக வேட்பாளர் தேர்வில் பிரதமர் மோடி இந்த தடவை அதிக கவனம் செலுத்தி உள்ளார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது வெற்றி பெற்ற பா.ஜ.க. எம்.பி.க்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை அவர் கடந்த 5 ஆண்டுகளாக கண்காணித்தும் ஆய்வு செய்தும் வந்தார். சரியாக செயல்படாத எம்.பி.க்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர மாட்டாது என்று பல தடவை எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இது தொடர்பாக ஒரு பட்டியலும் தயாரித்து இருந்தார். வேட்பாளர் தேர்வின்போது சரியாக செயல்படாத தற்போதைய எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியான நிலைப்பாட்டுடன் இருந்தார். இதன் காரணமாக தற்போதைய பா.ஜ.க. எம்.பி.க்களில் 3-ல் ஒருவருக்கு மீண்டும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி இதுவரை 5 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. நேற்று முன்தினம் மாலை 111 வேட்பாளர்கள் கொண்ட 5-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் மத்திய மந்திரி வி.கே.சிங் உள்பட 23 எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இதுவரை 5 கட்டங்களாக பா.ஜ.க. வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் 398 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த இடங்களில் ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த சுமார் 100 பேருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் அதிரடி அறிவுரையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்னமும் ராஜஸ்தான், ஒடிசா, மேற்குவங்காளம், பஞ்சாப் மாநிலங்களுக்கு பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. உத்தரபிரதேசத்திலும் சில தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது. பாரதிய ஜனதா மத்திய தேர்தல் குழு இன்று இது தொடர்பாக ஆலோசித்து வருகிறது.

எனவே மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காமல் கல்தா கொடுக்கப்படும் பா.ஜ.க. எம்.பி.க்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களில் அதிகளவு பெண்களும், புதுமுகங்களும் இடம் பிடித்துள்ளனர். இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 398 பா.ஜ.க. வேட்பாளர்களில் 66 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள். பாரதிய ஜனதா கட்சி இதுவரை இவ்வளவு பெண்களை தேர்தலில் களம் இறக்கியது இல்லை.

2009-ம் ஆண்டு தேர்தலின் போது பா.ஜ.க. போட்டியிட்ட 433 இடங்களில் 45 பெண் வேட்பாளர்கள் இடம் பெற்று இருந்தனர். 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.போட்டியிட்ட 428 இடங்களில் பெண்களுக்கு 38 இடங்கள் கொடுக்கப்பட்டு இருந்தது.
கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி 436 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் 55 பேர் பெண்கள். ஆனால் தற்போது இதுவரை 66 பெண்கள் தேர்தலில் போட்டியிட தேர்வாகி உள்ளனர்.

பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் இன்னமும் வர வேண்டி உள்ளது. அதிலும் பெண்கள் இடம் பெறும் பட்சத்தில் எந்த கட்சியிலும் இல்லாத அளவுக்கு அதிக பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த கட்சி என்ற சிறப்பை பாரதிய ஜனதா கட்சி பெறும்.