Tamilசெய்திகள்

பா.ஜ.க கூட்டணி கட்சிகள் ஆலோசனை – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார்

பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெறவும், இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறவும் பா.ஜ.க. தீவிரமாக வேலை செய்து வருகின்றது.

இதற்கிடையே, பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று டெல்லி செல்கிறார். இந்த கூட்டத்துக்கு பிறகு ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி தனித்தனியே சந்தித்து, பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.