X

பிப்ரவரி மாதம் டெல்லி சட்டசபைக்கு தேர்தல்!

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.

இந்த ஆட்சியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் 22-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து டெல்லி மாநில சட்டசபைக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் 2 பேர் மற்றும் டெல்லி மாநில உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தேர்தலை எப்போது நடத்துவது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. பள்ளி-கல்லூரிகளுக்கு இறுதி ஆண்டு தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக பிப்ரவரி 2-வது அல்லது 2-வது வாரத்தில் ஓட்டுப்பதிவு நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. ஓட்டுப்பதிவை ஒரே கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள், தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான பணிகள் ஆகியவற்றை ஜனவரி முதல் வாரத்தில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அடுத்த மாதம் டெல்லி சட்டசபை தேர்தல் தேதி அட்டவணை வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் காங்கிரசுடன் கூட்டணி சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை அந்த இரு கட்சிகளுக்கும் இடையே சுமூக நிலை ஏற்படவில்லை.

டெல்லி மாநில சட்ட சபைக்கு முதன் முதலாக 1951-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. பிறகு டெல்லி யூனியன் பிரதேசமாக மாறியதால் 1992 வரை சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை.

1993-ல் டெல்லியில் மீண்டும் சட்டசபை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு 1993-ல் நடந்த தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. 1998, 2003, 2008 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.

2013, 2015-ம் ஆண்டுகளில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. கடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களை கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றது.

5 ஆண்டுகளுக்கு பிறகு ஆம் ஆத்மி கட்சிக்கு மீண்டும் பலப்பரீட்சை சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த தடவை ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என்று பா.ஜனதா கட்சி கடந்த 3 மாதங்களுக்கு முன்பே பணிகளை தொடங்கி விட்டது.

டெல்லி முழுவதும் 2 ஆயிரத்து 700 நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணிகளை செய்து வருகிறது. வருகிற 2-ந்தேதி முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கவும் பா.ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. எனவே இந்த தடவை அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களும் வியூகம் வகுத்துள்ளனர்.