Tamilசெய்திகள்

பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார்

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகம் மற்றும் கேரளாவில் கணிசமான இடங்களை பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி அடிக்கடி இந்த பகுதிகளுக்கு வந்து பொதுமக்களிடையே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக இன்று (திங்கட்கிழமை) தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பங்கேற்கிறார்.

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே புறப்படும் வாகன அணிவகுப்பு, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று முடிவடைகிறது. அங்கு கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 5.30 மணிக்கு கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் வாகன அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கும் சாய்பாபாகாலனிக்கு செல்கிறார். தொடர்ந்து வாகன அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மேலும் வாகன அணிவகுப்பு நடைபெறும் பகுதியில் சாலையின் இருபுறத்திலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.